Monday 22 March 2010

சரித்திர நாயகன்

சரித்திர நாயகன்

ரொக்ஃ‍பெல்லர்.ஒரு பக்க வரலாறு

---------------------------------------------------------------------------------------

வருடம் 1863.
அதுவரை தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ரொக்ஃ‍பெல்லர்.

நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய
போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. ஏற்கனவே இந்தத் தொழிலில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிகப் பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ரொக்ஃபெல்லர்.

உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான
ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட அளவு பரல்கள் அனுப்புவதாகவும், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க, நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே, விலை குறைத்து விற்பைன
செய்தார். வியாபாரம் சூடு பிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை
அதிக விலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் ஃப்ரன்ட்ஸாக்கி கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872-ம் வருடம், அமெரிக்கா முழுவதும் ஆயில் வியாபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ரொக்ஃபெல்லரின் ‘ஸ்டாண்டர் ஒயில் கொம்ப‌னி’தான். போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் வ‌ன் பணக்காரர் ஆகிவிட்டார். ‘‘கோடி கோடியாகப் பணம் குவித்துவிட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானா?’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது!’’ என்றார்.

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக, 1839-ம் வருடம் பிறந்தார் ரொக்ஃபெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி, தன் 16-வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும், சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியாக‌ கொமிஷன் வியாபாரம் தொடங்கினார். ஓஹோவென வியாபாரம் நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது
.
எதிர்காலத்தில் எண்ணெய் வியாபாரம்தான் பெரும் வளர்ச்சியடையும் என
துல்லியமாகக் கணித்த ரொக்ஃபெல்லர், 1863-ம் வருடம் அந்தத் தொழிலில்
இறங்கினார். ‘‘உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளவு ஆசை?’’ என்று
நண்பர்கள் கேட்டபோது, ‘‘பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக
இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக்
கிடைக்கும் வெற்றியில்தான் இருக்கிறது!’’ என்றார்.

சொன்னது போவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.
முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை, அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார் ரொக்ஃபெல்லர். மருத்துவ ஆராய்ச்சிக்கென ‘ரொக்ஃபெல்லர் யூனிவர்சிட்டி’, மருத்துவ சேவைக்கென ‘ரொக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன்’ எனப் பல்வேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி, அமெரிக்காவின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். தான் எதிர்பார்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ரொக்ஃபெல்லர், 100 வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்!
---------------------------------------------------------------------------------------
நன்றி : M..சீனிவாசன்,